இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய திட்டம்:!! பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை இன்று தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைக்கின்றார்.

மக்கள் தங்களது பகுதியில் செயல்படும் நியாய விலை கடைகளில் மட்டுமே நியாய விலை பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது.திடீரென்று வெளிமாவட்டத்திற்கு, அல்லது வெளி மாநிலத்திற்கு குடியேறுபவர்கள்,நியாய விலை பொருட்களை பெறுவதில் சிக்கல் நிலவிவந்தது.இதனை சரிசெய்யும் வகையிலும் அனைவருக்கும் நியாயவிலைப் பொருட்கள் கிடைக்கும் வகையிலும் மத்திய அரசு “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தை கொண்டு வந்தது.

ஏற்கனவே தமிழகத்தில் கைரேகை மூலம் நியாய விலை பொருட்கள் வாங்கும் திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசு,மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைக்கின்றார்.

இந்த திட்டத்தின் மூலம் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கைரேகையை பதிவு செய்து அரிசி கோதுமை உள்ளிட்ட நியாயவிலைப் பொருட்களை எளிமையாக வாங்கி கொள்ளலாம்.

இந்த திட்டமானது சேலம்,ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி,கோயமுத்தூர், சிவகங்கை,திண்டுக்கல்,கடலூர், ராணிப்பேட்டை,புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி,தென்காசி, விழுப்புரம்,கன்னியாகுமரி, செங்கல்பட்டு,வடசென்னை, தென்சென்னை,காஞ்சிபுரம், திருவாரூர்,தேனி,நீலகிரி, நாமக்கல்,வேலூர்,திருப்பூர், கரூர்,நாகப்பட்டினம்,அரியலூர், பெரம்பலூர்,திருச்சி ஆகிய 32 மாவட்டங்களில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமுலுக்கு வருகின்றது.

ராமகோபாலன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் ராமகோபாலன். கடந்த 27 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, “இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர், பெரியவர் ராம கோபாலன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

சிந்தாந்த வேறுபாடுகள் எத்தனையோ இருந்தாலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், பெரியவர் ராம கோபாலன் அவர்களும், நல்ல நண்பர்களே! அவர்களிடையே இருந்த பரஸ்பர நன்மதிப்பு, ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொள்ளும் கண்ணியம், பண்பாடு மற்றும் பக்குவம் நிறைந்த நட்புணர்வு ஆகியவற்றை நான் அறிவேன். இருவரும் நேரில் சந்தித்து அளவளாவிய நேரங்களில் கூட, தத்தம் கொள்கைகளில் இருவருமே உறுதியாக இருந்தவர்கள். அந்தக் “கொள்கைச் சுதந்திரம்” இருவரின் நட்புணர்வில் என்றைக்குமே குறுக்கிட்டதில்லை.

ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனையுடன், சமயக் கருத்துகளை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியான அவரது மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது!ஆனால் நீதி வழங்கவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு

1992ஆம் ஆண்டில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்படுவதாக சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து இந்த தீர்ப்பு பரவலான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருக்கிறது. போதிய ஆதாரங்களோ, சதித் திட்டத்திற்கான தடயங்களோ இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி கூறியிருக்கிறார். இந்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கிற அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவாரங்கள் கரசேவை செய்வதாக அறிவித்து, ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி, 464 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாபர் மசூதியை 1992 இல் பலவந்தமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கரசேவகர்களை தூண்டும் வகையில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, உத்தரபிரதேச அன்றைய முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்டோர் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்களை மத்திய புலனாய்வுத்துறை திரட்டவில்லை. சதித் திட்டத்திற்கான சாட்சியங்களையும் சேகரிக்கவில்லை. இந்த வழக்கை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் மத்திய புலனாய்வுத்துறை முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது. இதன்மூலம் மத்திய புலனாய்வுத்துறை மத்திய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக செயல்பட்டதோ என்கிற பலத்த சந்தேகம் எழுகிறது. இதன் காரணமாகவே பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்ட பா.ஜ.க.வினர் அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் 2017 இல் பாபர் மசூதி இடிப்பு குறித்து உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட போது, ‘இது ஒரு கிரிமினல் நடவடிக்கை. இது அதிர்ச்சி தரத்தக்க வகையில் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைக்கு கேடு விளைவிக்கிற செயல். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த கூற்றுக்கு நேர்மாறாக லக்னோ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்திருக்கிறது.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், நீதி வழங்கவில்லை. எனவே, இந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

வேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் வகையில் ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள்

வேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் வகையில் ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள் வித்தியாசமான பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப் படுவதால் விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என்றிருந்த நிலை மாறி, இப்போது விவசாய வேலை கிடைக்காததால் 100 நாள் திட்டத்தில் வேலை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தின் காவிரி பாசனப் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் அதிகாலையில் எழுந்து விவசாய வேலை தேடி பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து செல்வதாகவும், சில நேரங்களில் 15 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்ற பிறகு தான் வேலை கிடைப்பதாகவும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி பெரும் கவலை அளிக்கிறது. அந்த செய்தி உண்மையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் விசாரித்த போது தான் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்டங்களிலும் இதே நிலை நிலவுவதாக தெரியவருகிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் ஒருபுறம் குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் 12 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளும், ஒரு லட்சம் ஏக்கரில் தாளடி நடவுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் வேளாண் தொழிலாளர்களுக்கு போதிய அளவில் வேலை கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து இருப்பதால், வேளாண் பணிகளுக்கு தேவைக்கு அதிகமான தொழிலாளர்கள் கிடைக்கின்றனர். அதுமட்டுமின்றி வேளாண் பணிகள் குறிப்பிடத்தக்க அளவில் எந்திரமயமாக்கப்பட்டு விட்டன. இவை உள்ளிட்ட காரணங்களால் தான் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வழக்கமாக காவிரி பாசன மாவட்டங்களில் நடவு, அறுவடை உள்ளிட்ட சாகுபடி காலத்தில் வேளாண் தொழிலாளர்களுக்கு அதிக தேவை இருக்கும். அதிலும் குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த 15 ஆண்டுகளில் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலை தான் நிலவி வருகிறது. அந்த நிலைமை இப்போது தலைகீழாக மாறியிருப்பதற்கு காரணம் கொரோனா நோய் பரவலும், அதன் விளைவுகளும் தான். இதற்காக யாரையும் குறை கூற முடியாது. அதே நேரத்தில் வேளாண்மை சார்ந்த கூலித் தொழில்களை மட்டுமே நம்பியுள்ள கோடிக் கணக்கான ஏழைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், அவர்களுக்கு அடிப்படை வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தவிர்க்க முடியாத கடமையாகும்.

கிராமப்புற பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டால், அவற்றை மீட்பதற்கான ஒரே தீர்வாக திகழ்வது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தான். ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் நிரந்தமான சொத்துகளை உருவாக்க முடிவதில்லை; வழக்கமாக வேளாண் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் ஊரக வேலைப் பணிகளுக்கு சென்று விடுவதால் வேளாண் பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்பது போன்ற விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருவது உண்மை தான். ஆனால், இன்றைய சூழலில் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும், கிராமப்புறங்களில் பணப் புழக்கத்தை அதிகரித்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது மட்டுமே தீர்வு.

காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத சூழலில், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மாறாக, கிராமப்புற வேலையின்மைக்கு சிறந்த தற்காலிகத் தீர்வாக இருக்கும். அதுமட்டுமின்றி, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை விவசாயத்திற்கும் நீட்டிப்பதன் மூலம் இனி வரும் காலங்களில் வேளாண் பணிகளுக்கு, அரசு மானியத்துடன் குறைந்த கூலியில் தொழிலாளர்கள் கிடைப்பதையும், ஊரக வேலை உறுதித் திட்டம் பயனுள்ள திட்டமாக மாற்றப்படுவதையும் உறுதி செய்ய முடியும். அது இரு தரப்புக்கும் சிறந்த நீண்ட காலத் தீர்வாக அமையும் என நம்பலாம்.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் இப்போது நிலவும் வேளாண்மை சார்ந்த வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை நடப்பாண்டில் 200 நாட்களாக உயர்த்த வேண்டும்; அடுத்த ஆண்டு முதல் இந்தத் திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? ஓ.பி.எஸ்க்கு பெருகும் ஆதரவு! மௌனம் காக்கும் எடப்பாடி

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? பத்திரிகை, தொலைக்காட்சி கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தை பிடித்துள்ள ஓ.பி.எஸ்.உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல்

தமிழகம் முழுவதும் எங்குபார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்து சற்றே சலசலப்பை ஓயச்செய்தார்.

ஆனால் மறுநாளே ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் முக்கிய தலைவர்கள் சிலர் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் இபிஎஸ்-ஐயும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்புகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என இருதரப்பில் இருந்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும், தமிழக முதல்வர் நடத்திய மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் புறக்கணித்தது இவர்களுக்கிடையே மீண்டும் புகைச்சலை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண் அறக்கட்டளை என்ற அமைப்பும், சில தன்னார்வ அமைப்புகளும் இணைந்து “சட்டமன்ற தேர்தல் 2021” என்ற தலைப்பில் 10 கேள்விகளை உள்ளடக்கி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு 3 ஆயிரம் மாதிரிகள் வீதம் சுமார் 7 லட்சம் மாதிரிகளை மக்கள் மத்தியில் கருத்துக்கணிப்பு நடத்தி சேகரித்தனர். இதில் அதிமுக முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-க்கு அதிகளவில் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிமுக தலைவர் யார் என்ற கேள்விக்கும் ஓபிஎஸ்-க்கு 75 சதவீத ஆதரவு இருந்தது.

இந்த நிலையில் அக்.7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளதால், தமிழக மக்களிடம் இதனை அறிந்து கொள்வதற்கு பேரார்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது பல்வேறு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் சமூக வலைதளங்களில் இது தொடர்பான கருத்துக்கணிப்பை நடத்தி வருகின்றனர். ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக்கணிப்பில் 66 சதவீதம் ஓபிஎஸ்-க்கும், 25 சதவீதம் இபிஎஸ்-க்கும், மற்றவர்களுக்கு 9 சதவீதம் என வாக்குகளை பதிவு செய்திருந்தனர். சாணக்யா சேனல் சார்பில் டிவிட்டரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 643 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் ஓபிஎஸ்-க்கு 63 சதவீதமும், இபிஎஸ்-க்கு 37 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

சவுக்கு சங்கர் இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மொத்தம் 36 ஆயிரத்து 761 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் ஓபிஎஸ்-க்கு 38.5 சதவீதமும், இபிஎஸ்-க்கு 22.6 சதவீதமும். சுமந்த் சி.ராமனுக்கு 29.8 சதவீதமும், டிடிவி தினகரனுக்கு 9.1 சதவீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதே போல் இந்தியன் 7 என்ற இணைதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஓபிஎஸ்-க்கு 59 சதவீதமும், இபிஎஸ்-க்கு 41 சதவீத வாக்குகளையும் ஆதரவாக பதிவு செய்திருந்தனர்.

இதுதவிர பொதுமக்களும் தங்களது பங்கிற்கு தனித்தனியாக அதிமுக வேட்பாளராக யார் வரவேண்டும்? என்ற கேள்வியை பதிவிட்டு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். அனைத்து கருத்துக்கணிப்புகளிலுமே ஓபிஎஸ்-க்கு ஆதரவு நிலை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளன. கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வெளிவந்து கொண்டிருப்பதால் இபிஎஸ் தரப்பினர் மௌனம் காத்து வருகின்றனர். ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் படையெடுத்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல்களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

பாஜகவிற்கு துணை போவதன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் எடப்பாடி அரசு! வைகோ கண்டனம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் முறை மாற்றப்பட்டால் இடஒதுக்கீட்டு முறை மற்றும் கட்டணங்கள் உயரும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த, உயர் சிறப்பு கல்வி நிறுவனம் (Institute of Eminence-IOE) என்னும் சிறப்புத் தகுதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு 2017 இல் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி நிதி உதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகம் தேர்வு செய்யப்பட்டு, ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்னும் சிறப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அண்ணா பல்கலைக் கழகத்தை, மத்திய அரசு சிறப்புநிலை கல்வி நிறுவனம் என்கிற உயரிய சிறப்பை வழங்கிவிட்டு, பல்கலைக் கழகத்தின் தனித்துவமான அடையாளத்தை ஒழித்துக் கட்டவும் தீர்மானித்து இருப்பது கண்டனத்துக்கு உரியதாகும். மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு துணை போவதன் மூலம் தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைத்து வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, அண்ணா பல்கலைக் கழகத்தின் தனித்தன்மையைச் சிதைக்கும் வேலையில் இறங்கி உள்ளது.

அண்ணா பல்கலையின் தனித்துவத்தை சிதைக்கும் முடிவுக்கு எடப்பாடி அரசு ஒப்புதல் அளிப்பதா? - வைகோ கண்டனம்

கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சட்டமன்றத்தில் உலகப்புகழ் பெற்ற பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான கிண்டி அண்ணா பல்கலைக் கழகம், நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்படும் என்று சட்ட முன்வரைவை நிறைவேற்றி இருக்கிறது. அதில் அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றினால் உலக அளவில் அதற்குரிய பெயரும், தரமும் குறைந்துவிடும். அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது. அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. அண்ணா பல்கலைக் கழகத்தைப் பிரித்தால் அதன் கீழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு உரிய நிதி கிடைக்காது. மாணவர்கள் எந்தப் பல்கலையின் கீழ் தேர்ச்சி பெற்றார்கள் என்ற குழப்பம் நீடிக்கும் என்று அண்ணா பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர்கள் தமிழக ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் அவர்களுக்குக் கடிதம் எழுதி உள்ளனர்.

மேலும் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் கூட்டமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் நான்கு வளாகக் கல்லூரிகளும் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் தங்கள் தரத்தைச் சிறப்பாக பராமரிப்பதால்தான் உலக அளவில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அங்கீகாரம் உள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரில் இதுவரை வெளியான ஆய்வுகளை அளவுகோலாக வைத்துதான் சிறந்த ஆய்வு மையத்துக்கான ‘ஹை இன்டக்ஸ்’ மதிப்பெண் வழங்கப்படும். பெயர் மாறினால் அந்த மதிப்பெண் பூஜ்யமாகிவிடும்.

தொடர் உழைப்பில் 41 ஆண்டுகள் உருவாக்கிய தரத்தை ஐந்தாண்டுகளில் மீட்டெடுக்க முடியாது. இதேபோல், பழைய மாணவர்கள் நிதி உதவி, தொழில் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மற்றும் பட்டம் அளிப்பு அங்கீகாரம் என அனைத்து நிர்வாகப் பணிகளும் கேள்விக்குறியாகும். தற்போதுள்ள சிண்டிகேட் முறை மாற்றப்பட்டு, நிர்வாகக் குழு அமைக்கப்படுகிறது. இதையடுத்து, துணைவேந்தர் பதவி இயக்குநர் என்று மாற்றப்படும். மேலும், இட ஒதுக்கீட்டுக்கான மதிப்பெண் வரையறை மற்றும் கல்விக் கட்டணம் உயரும் என்பதால் ஏழை மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

அண்ணா பல்கலைக் கழகம்தான் தமிழக மாணவர்களின் பொறியியல் கனவுக்கு உயிர் ஊட்டுகிறது. எனவே கல்வியாளர்கள் கருத்துகளைக் கேட்டு அரசு முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பல்கலைக் கழக பேராசிரியர் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது. தமிழக ஆளுநரும், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரும், அண்ணாவின் பெயரால் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தின் தனித்துவத்தைச் சிதைக்கும் முயற்சிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதை ஏற்க முடியாது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றும் முடிவைக் கைவிட்டு, இணைப்புப் பொறியியல் கல்லூரிகளைப் புதிதாக உருவாக்கப்படும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்துடன் இணைத்து, இளைஞர்கள், மாணவர்களின் நெஞ்சில் எழுச்சி நாயகராக வீற்றிருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் பெயரைச் சூட்டுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வேண்டுகோள்

அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்ததும், அ.தி.மு.க ஆதரிப்பதுமான மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிடுக” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

“உணவுப் பொருட்களான வேளாண் விளைபொருட்களை வரம்பின்றிப் பதுக்கி” வைக்க அனுமதித்திருக்கும் “அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020”; விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு)ச் சட்டம்-2020”; மற்றும் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஆதார விலையை அங்கீகரிக்க மறுக்கும், “விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்- 2020”; ஆகியவற்றை விவசாயிகளும், வெகுமக்களும் எதிர்த்து இன்றைக்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வேளாண் விரோத சட்டங்களை அ.தி.மு.க. அரசு ஆதரித்து – ஆதரித்ததோடு மட்டுமின்றி, அச்சட்டம் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று; வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்கு எதிராகப் பேசி வருகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும், கூட்டணிக் கட்சிகளும் – விவசாய அமைப்புகளும், பொதுமக்களும் இந்தச் சட்டங்களுக்கு எதிராக, தொடர் போராட்டம் நடத்தி, அவர்கள் மீதெல்லாம் “கொத்துக் கொத்தாக” வழக்குகளைப் பதிவு செய்து, வன்மத்துடன் நடந்து வருகிறது அ.தி.மு.க. அரசு. வேளாண்மைக்கும் – விவசாயிகளுக்கும் விரோதமான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. அரசுகள்- “இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்து” ஏழை – எளிய நடுத்தர மக்களின் ஒரே நம்பிக்கையாக, தொன்று தொட்டு இருந்து வரும் பாரம்பரிய விவசாய நடைமுறைகளைச் சீர்குலைத்து; அனைவரையும் பிரச்சினைகளுக்குள் தள்ளத் திட்டமிட்டிருப்பது, இவர்களின் “இச்சட்டங்களுக்கான நிபந்தனையற்ற ஆதரவுப் பிரச்சாரத்தில்” எதிரொலிக்கிறது.

இந்தச் சூழலில், நம் கழனிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்க; நம் விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் அ.தி.மு.க. அரசுக்கு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தொட்டிலாக இருக்கும் ஊராட்சி மன்றங்களிலும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஆகவே, அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளான, வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்து, அ.தி.மு.க. ஆதரித்துள்ள மேற்கண்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், தங்களது கிராமசபைக் கூட்டத்தில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகளின் நலனையும், நம் வேளாண் நலனையும் மனதில் வைத்து, இன்றைக்கும் கிராமப் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்துறையைக் காப்பாற்ற இந்தக் கண்டனத் தீர்மானத்தை, கட்சி வித்தியாசம் பாராமல், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் நிறைவேற்றித்தர வேண்டும்; தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை; அ.தி.மு.க. அரசு, சுயநலக் காரணங்களுக்காக, காட்டாத எதிர்ப்பினை; மத்திய பா.ஜ.க. அரசுக்குத் தெளிவுபடத் தெரிவித்திட வேண்டும்; என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி மற்றும் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு முடிவு

எடப்பாடி மற்றும் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு முடிவு

வரும் 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து மண் ஃபவுண்டேசன் மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் ஒரு மெகா கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 234 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3000 என்ற எண்ணிக்கையில் பொதுமக்கள், தொழிலாளிகள், மாணவ மாணவிகள் உட்பட மொத்தம் 7 லட்சத்து 2 ஆயிரம் கருத்துக்கணிப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 10 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதில்கள் பெறப்பட்டன.

வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு என்ற கேள்விக்கு அதிமுக-50.2, திமுக-35.6, பிறகட்சிகள்-14.2 என்ற சதவீத அளவில் வாக்குகளை பதிவாகியுள்ளது. தமிழக முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-28.7, இபிஎஸ்-27.9, மு.க.ஸ்டாலின்-26.6, ரஜினி-6.9, அன்புமணி-6.2, கமல்-3.7 ஆகிய சதவீதங்களில் வாக்குபதிவாகியுள்ளது.

அதிமுகவின் பலம் என்ற கேள்விக்கு இரட்டை இலை சின்னம்-76.5, ஜெயலலிதாவின் செல்வாக்கு-23.5 சதவீதம் எனவும், அதிமுகவின் பலவீனம் என்ற கேள்விக்கு இரட்டைத் தலைமை-65.4, ஆளுமையற்ற நிலைமை-34.6 சதவீதம் எனவும் பதிலளித்திருந்தனர். தற்போதைய அதிமுக தலைவர்களில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் யார்?

என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-74.7, இபிஎஸ்-25.3 சதவீதம் எனவும்,

அதிமுகவில் இந்த மாற்றத்தை செய்தால் கட்சி பலப்படும் என்றால் அந்த மாற்றம் எது? என்ற கேள்விக்கு ஒற்றைத் தலைமை-75.4, சசிகலா தலைமை-19.3, சசிகலா-டிடிவி இணைப்பு- 5.3 சதவீதம் எனவும் பதிவு செய்தனர். அதிமுகவின் ஆட்சி நிலவரம் குறித்த கேள்விக்கு நன்று என 21.7 சதவீதம் பேரும், பரவாயில்லை என 49.4 சதவீதம் பேரும், மோசம் என 28.9 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

திமுகவின் பலம் என்ற பகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு 78.6 சதவீதம் பேரும், கட்சியின் கட்டுக் கோப்பு என 21.4 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர். அதேபோல் பலவீனம் என்ற பகுதியில் கருணாநிதி இல்லாதே என 66.2 சதவீதம் பேரும், தலைமை சரியில்லை என 33.8 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.

திமுகவின் தலைமை மற்றும் மு.க.ஸ்டாலின் பற்றிய கேள்விக்கு முதல்வராக தகுதியானவர் என 41.6 சதவீதம் பேரும், அவரிடம் கருணாநிதியின் ஆளுமை அறவே இல்லை என 42.8 சதவீதம் பேரும், கட்சி பலமிழக்கிறது என 13.4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். கோரிக்கை திட்டங்களை நிறைவேற்றினால் ஆளும்கட்சிக்கு வெற்றி சாத்தியமா? என்ற கேள்விக்கு சாத்தியம் என 47.3 சதவீதம் பேரும், சாத்தியமில்லை என 25.8 சதவீதம் பேரும், கணிக்க முடியாது என 26.9 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.

ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு மாற்றம் நிச்சயம் வரும் என 13.1 சதவீதமும், மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என 59.5 சதவீதமும், வருகையே தேவையற்றது என 27.4 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இந்த மெகா கருத்துக்கணிப்பு குறித்து மண் அறக்கட்டளையின் தன்னார்வலர் பி.செல்லதுரை கூறுகையில், “இந்த கருத்துக்கணிப்பானது நடுநிலையோடு தமிழக அளவில் மக்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக தன்னார்வலர்களை இணைத்து பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் மாதிரிகள் வீதம் மாதிரிகள் எடுப்பது என்பது இதுவே முதல்முறை. இதன் மூலம் மக்களின் தெளிவான மனநிலைமையை வெளிக்கொணர வேண்டும் என்பதே எங்களது நோக்கம். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை 50.2 சதவீதம் பேர் வலியுறுத்தி உள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில் அடுத்த கட்ட கருத்துக்கணிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இந்த கருத்துக்கணிப்பு முடிவு அடுத்து தாங்கள் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கும் திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது அதே வகையில் அதிமுகவில் தான் செல்வாக்கு பெற்று வருகிறோம் என நினைத்த எடப்பாடி தரப்புக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவு

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 82 வது வயதில் காலமானார். 

இதனையடுத்து பாஜகவின் முக்கிய தலைவர்கள் அவரது மறைவிற்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, “ஜஸ்வந்த் சிங் ஜி நம் தேசத்தை முன்னேற்ற விடாமுயற்சியுடன் பணியாற்றினார். முதலில் ஒரு சிப்பாயாகவும் பின்னர் அவரது நீண்ட கால அரசியல் பயணத்தில் அடல் ஜி அரசாங்கத்தின் போது, ​​அவர் முக்கியமான இலாகாக்களைக் கையாண்டார் மற்றும் நிதி, பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரங்களில் ஒரு வலுவான அடையாளத்தை வைத்திருந்தார். அவரது மறைவால் வருந்துகிறேன்.” என்றார்.

மேலும் அவர் “அரசியல் மற்றும் சமூகத்தின் விஷயங்களில் ஜஸ்வந்த் சிங் ஜி தனது தனித்துவமான முன்னோக்குக்காக நினைவுகூரப்படுவார். பாஜகவை வலுப்படுத்தவும் அவர் பங்களித்தார். எங்கள் தொடர்புகளை நான் எப்போதும் நினைவில் கொள்வேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.” என தெரிவித்தார்.

அவர் மேலும், “ஸ்ரீ மன்வேந்திர சிங்குடன் பேசியதுடன், ஸ்ரீ ஜஸ்வந்த் சிங் ஜியின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். அவரது இயல்புக்கு ஏற்றவாறு, ஜஸ்வந்த் ஜி கடந்த ஆறு ஆண்டுகளாக மிகுந்த தைரியத்துடன் தனது நோயை எதிர்த்துப் போராடினார்.” என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானதில் தன்னுடைய வேதனை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது“மூத்த பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீ ஜஸ்வந்த் சிங் ஜி காலமானதால் ஆழ்ந்த வேதனையடைந்தேன். அவர் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு உட்பட தேசத்திற்கு பல வழிகளில் சேவை செய்தார். அவர் தன்னை ஒரு திறமையான அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்று தனது செயல்பாட்டின் மூலம் உணர்த்தினார்.” என அதில் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மேலும் “ஸ்ரீ ஜஸ்வந்த் சிங் ஜி தனது அறிவார்ந்த திறன்களுக்காகவும், தேசத்திற்கான சேவையில் நட்சத்திர சாதனைகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். ராஜஸ்தானில் பாஜகவை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி,” என ராஜ்நாத் சிங் அதில் பதிவிட்டுள்ளார்.

பேனர்கள் விழுந்து ரசிகர்கள் உயிரிழப்பதால் சினிமாவை தடை செய்ய முடியுமா? சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி

கடந்த சில தினங்களாக நீட் தேர்விற்கு தயாராகி வந்த மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. குறிப்பாக ஒரே நாளில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்த இந்த நீட் தேர்விற்கு எதிராகவும்,கொரோனா காலத்திலும் இந்த தேர்வை நடத்த முயற்சித்த மத்திய அரசிற்கு எதிராகவும் கண்டன குரல்கள் எழுந்த வண்ணமேயுள்ளது.

இந்நிலையில் தான் நடிகர் சூர்யா நீட் தேர்வை எதிர்த்து மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நீட்‌ தேர்வு பயத்‌தில்‌ ஒரே நாளில்‌ மூன்று மாணவர்கள்‌ தற்கொலை செய்துகொண்டது மனசாட்‌சியை உலுக்குகிறது. கொரோனா அச்சத்தால்‌ உயிருக்கு பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது.

ஒரே நாளில்‌ ‘நீட்‌ தேர்வு’ மூன்று மாணவர்களைக்‌ கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும்‌ நடந்தது. இனி நாளையும்‌ நடக்கும்‌. நாம்‌ விழிப்புடன்‌ இல்லாமல்‌ போனால்‌ மீண்டும்‌ மீண்டும்‌ நடந்து கொண்டே இருக்கும்‌. அப்பாவி மாணவர்களின்‌
மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. சாதரண குடும்பத்து பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீ வைக்கிற ‘நீட்‌ தேர்வுக்கு’ எதிராக ஒரு சமூகமாக நாம்‌ ஒன்றிணைந்து குரல்‌ எழுப்புவோம்‌, எனவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது அறிக்கைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணமேயுள்ளது. இதில் நடிகையும் பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் நடிகர் சூர்யாவை விமர்சனம் செய்துள்ளார்.

இதில் நடிகர்களின் திரைப்பட பேனர்கள் விழுந்து ரசிர்கள் உயிரிழப்பதால், சினிமாவை தடை செய்ய முடியுமா..? என நடிகர் சூர்யாவிற்கு எதிராக காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து நடிகையும், பா.ஜ.க.வைச் ஆதரவளருமான, காயத்ரி ரகுராம் பதிலளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் பேனர்கள் வைத்து கொண்டாடுகிறார்கள். அப்போது, பேனர்கள் சரிந்து விழுந்து ரசிகர்கள் உயிரிழக்கும் சம்பங்கள் அரங்கேறி வருகின்றன. ரசிகர் மன்றத்தில் பணத்தை செலவு செய்து விட்டு, உயிரிழந்து விடுகின்றனர். இதற்கான சினிமாவை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்க முடியுமா..? இதில், எந்தவொரு லாஜிக்குமே இல்லை தானே..?

எனவே, தேர்வுகளை எழுத மாணவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். நோயாளிகளை சந்திக்கும் ஒவ்வொரு மருத்துவர்களுக்கும், நாள்தோறும் தேர்வு எழுதுவது போன்றுதான், என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட சூர்யாவின் கருத்திற்கு பதிலளித்து நீட் தேர்விற்கு ஆதரவாக காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு பலர் எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் தொடர்ந்து பதில் அளித்து வருகின்றனர்.