பேனர்கள் விழுந்து ரசிகர்கள் உயிரிழப்பதால் சினிமாவை தடை செய்ய முடியுமா? சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி

கடந்த சில தினங்களாக நீட் தேர்விற்கு தயாராகி வந்த மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. குறிப்பாக ஒரே நாளில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்த இந்த நீட் தேர்விற்கு எதிராகவும்,கொரோனா காலத்திலும் இந்த தேர்வை நடத்த முயற்சித்த மத்திய அரசிற்கு எதிராகவும் கண்டன குரல்கள் எழுந்த வண்ணமேயுள்ளது.

இந்நிலையில் தான் நடிகர் சூர்யா நீட் தேர்வை எதிர்த்து மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நீட்‌ தேர்வு பயத்‌தில்‌ ஒரே நாளில்‌ மூன்று மாணவர்கள்‌ தற்கொலை செய்துகொண்டது மனசாட்‌சியை உலுக்குகிறது. கொரோனா அச்சத்தால்‌ உயிருக்கு பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது.

ஒரே நாளில்‌ ‘நீட்‌ தேர்வு’ மூன்று மாணவர்களைக்‌ கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும்‌ நடந்தது. இனி நாளையும்‌ நடக்கும்‌. நாம்‌ விழிப்புடன்‌ இல்லாமல்‌ போனால்‌ மீண்டும்‌ மீண்டும்‌ நடந்து கொண்டே இருக்கும்‌. அப்பாவி மாணவர்களின்‌
மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. சாதரண குடும்பத்து பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீ வைக்கிற ‘நீட்‌ தேர்வுக்கு’ எதிராக ஒரு சமூகமாக நாம்‌ ஒன்றிணைந்து குரல்‌ எழுப்புவோம்‌, எனவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது அறிக்கைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணமேயுள்ளது. இதில் நடிகையும் பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் நடிகர் சூர்யாவை விமர்சனம் செய்துள்ளார்.

இதில் நடிகர்களின் திரைப்பட பேனர்கள் விழுந்து ரசிர்கள் உயிரிழப்பதால், சினிமாவை தடை செய்ய முடியுமா..? என நடிகர் சூர்யாவிற்கு எதிராக காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து நடிகையும், பா.ஜ.க.வைச் ஆதரவளருமான, காயத்ரி ரகுராம் பதிலளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் பேனர்கள் வைத்து கொண்டாடுகிறார்கள். அப்போது, பேனர்கள் சரிந்து விழுந்து ரசிகர்கள் உயிரிழக்கும் சம்பங்கள் அரங்கேறி வருகின்றன. ரசிகர் மன்றத்தில் பணத்தை செலவு செய்து விட்டு, உயிரிழந்து விடுகின்றனர். இதற்கான சினிமாவை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்க முடியுமா..? இதில், எந்தவொரு லாஜிக்குமே இல்லை தானே..?

எனவே, தேர்வுகளை எழுத மாணவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். நோயாளிகளை சந்திக்கும் ஒவ்வொரு மருத்துவர்களுக்கும், நாள்தோறும் தேர்வு எழுதுவது போன்றுதான், என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட சூர்யாவின் கருத்திற்கு பதிலளித்து நீட் தேர்விற்கு ஆதரவாக காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு பலர் எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் தொடர்ந்து பதில் அளித்து வருகின்றனர்.