புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குநரான ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாகியிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கொரோனாவை பொருத்தவரை சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என எந்தவித பாகுபாடு இல்லை. அனைவருக்கும் இத்தொற்று சாதாரணமாக பரவி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பட்சன், ஐஸ்வர்யா அர்ஜூன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.
இதுபோல், தற்போது தெலுங்கு இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து ராஜமெளலி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களும் சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின் குணமடைந்தது. இருந்தாலும் நாங்கள் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டோம். இதில் எங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து மருத்துவர்கள் பரிந்துரையின்படி, நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.
அறிகுறிகள் எதுவுமில்லாமல் எங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது மருத்துவர்களின் வழிமுறைகளை முறையாக பின்பற்றிவருகிறோம். குணமடைந்தவுடன் எங்கள் பிளாஸ்மாவை தானம் செய்து ஆன்டிபாடிகளை உருவாக்க காத்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.