ராமகோபாலன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் ராமகோபாலன். கடந்த 27 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, “இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர், பெரியவர் ராம கோபாலன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

சிந்தாந்த வேறுபாடுகள் எத்தனையோ இருந்தாலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், பெரியவர் ராம கோபாலன் அவர்களும், நல்ல நண்பர்களே! அவர்களிடையே இருந்த பரஸ்பர நன்மதிப்பு, ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொள்ளும் கண்ணியம், பண்பாடு மற்றும் பக்குவம் நிறைந்த நட்புணர்வு ஆகியவற்றை நான் அறிவேன். இருவரும் நேரில் சந்தித்து அளவளாவிய நேரங்களில் கூட, தத்தம் கொள்கைகளில் இருவருமே உறுதியாக இருந்தவர்கள். அந்தக் “கொள்கைச் சுதந்திரம்” இருவரின் நட்புணர்வில் என்றைக்குமே குறுக்கிட்டதில்லை.

ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனையுடன், சமயக் கருத்துகளை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியான அவரது மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி மற்றும் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு முடிவு

எடப்பாடி மற்றும் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு முடிவு

வரும் 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து மண் ஃபவுண்டேசன் மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் ஒரு மெகா கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 234 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3000 என்ற எண்ணிக்கையில் பொதுமக்கள், தொழிலாளிகள், மாணவ மாணவிகள் உட்பட மொத்தம் 7 லட்சத்து 2 ஆயிரம் கருத்துக்கணிப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 10 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதில்கள் பெறப்பட்டன.

வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு என்ற கேள்விக்கு அதிமுக-50.2, திமுக-35.6, பிறகட்சிகள்-14.2 என்ற சதவீத அளவில் வாக்குகளை பதிவாகியுள்ளது. தமிழக முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-28.7, இபிஎஸ்-27.9, மு.க.ஸ்டாலின்-26.6, ரஜினி-6.9, அன்புமணி-6.2, கமல்-3.7 ஆகிய சதவீதங்களில் வாக்குபதிவாகியுள்ளது.

அதிமுகவின் பலம் என்ற கேள்விக்கு இரட்டை இலை சின்னம்-76.5, ஜெயலலிதாவின் செல்வாக்கு-23.5 சதவீதம் எனவும், அதிமுகவின் பலவீனம் என்ற கேள்விக்கு இரட்டைத் தலைமை-65.4, ஆளுமையற்ற நிலைமை-34.6 சதவீதம் எனவும் பதிலளித்திருந்தனர். தற்போதைய அதிமுக தலைவர்களில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் யார்?

என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-74.7, இபிஎஸ்-25.3 சதவீதம் எனவும்,

அதிமுகவில் இந்த மாற்றத்தை செய்தால் கட்சி பலப்படும் என்றால் அந்த மாற்றம் எது? என்ற கேள்விக்கு ஒற்றைத் தலைமை-75.4, சசிகலா தலைமை-19.3, சசிகலா-டிடிவி இணைப்பு- 5.3 சதவீதம் எனவும் பதிவு செய்தனர். அதிமுகவின் ஆட்சி நிலவரம் குறித்த கேள்விக்கு நன்று என 21.7 சதவீதம் பேரும், பரவாயில்லை என 49.4 சதவீதம் பேரும், மோசம் என 28.9 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

திமுகவின் பலம் என்ற பகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு 78.6 சதவீதம் பேரும், கட்சியின் கட்டுக் கோப்பு என 21.4 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர். அதேபோல் பலவீனம் என்ற பகுதியில் கருணாநிதி இல்லாதே என 66.2 சதவீதம் பேரும், தலைமை சரியில்லை என 33.8 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.

திமுகவின் தலைமை மற்றும் மு.க.ஸ்டாலின் பற்றிய கேள்விக்கு முதல்வராக தகுதியானவர் என 41.6 சதவீதம் பேரும், அவரிடம் கருணாநிதியின் ஆளுமை அறவே இல்லை என 42.8 சதவீதம் பேரும், கட்சி பலமிழக்கிறது என 13.4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். கோரிக்கை திட்டங்களை நிறைவேற்றினால் ஆளும்கட்சிக்கு வெற்றி சாத்தியமா? என்ற கேள்விக்கு சாத்தியம் என 47.3 சதவீதம் பேரும், சாத்தியமில்லை என 25.8 சதவீதம் பேரும், கணிக்க முடியாது என 26.9 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.

ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு மாற்றம் நிச்சயம் வரும் என 13.1 சதவீதமும், மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என 59.5 சதவீதமும், வருகையே தேவையற்றது என 27.4 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இந்த மெகா கருத்துக்கணிப்பு குறித்து மண் அறக்கட்டளையின் தன்னார்வலர் பி.செல்லதுரை கூறுகையில், “இந்த கருத்துக்கணிப்பானது நடுநிலையோடு தமிழக அளவில் மக்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக தன்னார்வலர்களை இணைத்து பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் மாதிரிகள் வீதம் மாதிரிகள் எடுப்பது என்பது இதுவே முதல்முறை. இதன் மூலம் மக்களின் தெளிவான மனநிலைமையை வெளிக்கொணர வேண்டும் என்பதே எங்களது நோக்கம். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை 50.2 சதவீதம் பேர் வலியுறுத்தி உள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில் அடுத்த கட்ட கருத்துக்கணிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இந்த கருத்துக்கணிப்பு முடிவு அடுத்து தாங்கள் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கும் திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது அதே வகையில் அதிமுகவில் தான் செல்வாக்கு பெற்று வருகிறோம் என நினைத்த எடப்பாடி தரப்புக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.